Loading Now

அடிமைகள் கூட்டமே கேளுங்கள்

கல்வியில் சிறந்தயெம் தமிழ்நாடே
கரூஉரில் நிகழ்ந்ததை என்னயென்பாய்
தொல்லைகள் எத்தனை எத்தனையோ
தோன்றிய எண்ணில் பொழுதுகளில்
அல்லல் அறுத்திட வந்தானா
அறத்துடன் எதும்விஜய் செய்தானா
வல்லவன் தளபதி இதுவரையில்
வளர்தமிழ் மண்ணுக் கென்னசெய்தான்
நடிகனைக் காவலன் என்றெண்ணி
நற்சொல் பாட்டுக்கு மயங்கிவரும்
அடிமைகள் கூட்டமே கேளுங்கள்
ஆட்டுமூளை இனமே பாருங்கள்
நடிகனின் மகன்மகள் வந்தனரா
நடிகனின் மனைவியும் வந்தாரா
நடனங்கள் ஆடிடும் குரங்கினமே
நடிப்பது அவன்தொழில் புரிகிறதா
குழந்தைகள் அழைத்துப் போனீரே
கூத்தாடிக் காணத் துடித்தீரே
பலபல பளபள கதைசொன்னான்
பாட்டுகள் பாடியே உயர்நின்றான்
தளபதி தளபதி என்றீரே
தாகம் பசியெலாம் மறந்தீரே
இழப்பினில் நீங்கள் கதறுகையில்
இல்லத்துள் ஒளிந்தான் தளபதியே
அரசியற் காரர்கள் அனைவருமே
அறுவடை செய்யவே வருகின்றார்
தருகின்றார் உயிருக்குக் காசோலை
தந்திரம் அதில்பல செய்கின்றார்
அருந்தமிழ் மண்ணின் மைந்தர்களே
அறிவைக் கொஞ்சம் பயன்படுத்தி
இருளுல கிருந்து வெளிவாரீர்
இனியெவனும் நம்பிச் சாகாதீர்
அரசியற் காரன்தம் பிள்ளைகளை
அழகாய்க் காத்து வளர்த்திடுவான்
அருந்தமிழ் என்றே குரைத்தாலும்
ஆங்கிலக் கல்வியே கொடுத்திடுவான்
வருவான் விலைஉயர் ஊர்திகளில்
வாயை விற்றுப் பிழைப்பதற்கே
தருவான் என்புத் துண்டுனக்குத்
தற்குறி நீயெனக் குறிப்பதற்கே
திரைப்பட நாயகர் பின்னாலும்
தித்திப்புச் சொற்பேசிப் பின்னாலும்
கிரிக்கெட்டா டுபவன் பின்னாலும்
கிறுக்குப் பிடித்து அலையாதீர்
பிரிவினைத் தூண்டும் வெறியர்க்கும்
பேராசை பிடித்த அரக்கர்க்கும்
உருகிப் பேசுபவர் நடிப்புக்கும்
உயிரைப் பரிசாய்க் கொடுக்காதீர்
அரசியல் வாதிகள் அனைவருமே
அரங்கேற்றுவர் பல்வகை நாடகமே
பெருமை தேடியே அலைந்திடுவர்
பெரும்பொருள் குவிக்கவே வாழ்ந்திடுவர்
அறிவிலி என்றுனை நகைத்திடுவர்
அறமா? அதுயாதெனக் கேட்டிடுவர்
அறியாமைத் தீயிலுன் தலையிட்டு
அன்றாடம் வேள்விகள் நடத்திடுவர்
உங்கள் உழைப்பில் வாழ்பவர்தாம்
உம்மை ஆளும் ஆட்சியர்கள்
உங்கள் பொருளில் பிழைப்பவர்தாம்
உம்மை மயக்கும் நாயகர்கள்
உங்கள் அன்பைச் சுரண்டிவிட்டு
உமக்கே கூற்றுவன் ஆகிடுவர்
உங்கள் அரசியல்வாதி எல்லாம்
உமக்குப் பணியாள் மறவாதீர்
அருந்தமிழ் நாட்டு அரசியலில்
அறமுடைத் தலைவன் எவனுமிலை
இருந்தனர் அண்ணா காமராஜர்
இன்றிங்கு அவர்போல் யாருமில்லை
திருடிப் பிழைக்கவே கட்சிவைக்கும்
தீராத் துயரே தமிழ்நிலனில்
செருக்குடன் வாழும் தமிழினமே
திரைப்படம் மெய்யல புரிவீரே
உயிரைக் குடிக்கும் கூற்றுவன்போல்
உயரே பறந்தே வந்திடுவான்
பயிரை மேயும் வேலியைப்போல்
பல்கதை சொல்லி மயக்கிடுவான்
துயரைத் துடைப்பது போல்வந்து
சுயநலம் காண நடித்திடுவான்
கயவர் சொற்களில் தொலையாதீர்
கல்லாப் பறழாய்த் திரியாதீர்
மறவர்க் குடியில் பிறந்தவரே
மண்டையுள் களிமண் ஏற்றாதீர்
அறிவைத் தொலைத்து வாழாதீர்
அரசியல் வாதிகள் நம்பாதீர்
உறவுகள் பேணிக் காத்திடுவீர்
உண்மை உணர்ந்து செயல்படுவீர்
குறைகள் கண்டால் சீறிடுவீர்
குரங்காய் வாழ மறுத்திடுவீர்

புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed