Loading Now

கரூஉர் கம்பலை (தரவுகொச்சகக் கலிப்பா)

கண்ணீரும் கம்பலையும்
கரூஉரில் கேட்குதம்மா
முந்நீரைத் தாண்டிவந்து
மூச்சடைக்கச் செய்குதம்மா
என்னென்று சொல்வதம்மா
ஏனென்று நினைப்பதம்மா
வன்செயலா வஞ்சனையா
வானெங்கும் ஓலமம்மா
நஞ்சுவலை வனைந்தனரோ
நரபலியை நடத்தினரோ
பஞ்சுபோன்ற உடல்மீது
பாறையென மோதினரோ
பிஞ்சுகளை அழைத்துப்போய்ப்
பிணமாக்கி வைத்தனரே
நெஞ்சமெலாம் கனக்கிறதே
நில்லாமல் துடிக்கிறதே
தூத்துக்குடிக் கொலைகளுக்குத்
தொலைதூரம் தள்ளிநின்றோர்
காற்றைப்போல் பறந்துவந்தே
காசோலை தருகின்றர்
ஆற்றுவெள்ளம் போல்பாய்ந்து
அரசியல்வா திகளெலாம்
தேற்றுகின்றர் மக்களைத்தாம்
தேம்பித்தேம் பிஅழுதபடி
கள்ளக்கள் குடியினாலே
கள்ளக்கு றிச்சியன்று
பள்ளங்கண் டிருந்தவேளை
பதறியவர் எவருமிலை
கள்வரெலாம் இன்றேனோ
கண்ணீர்த்தீ உகுக்கின்றர்
தள்ளுமுள்ளு அரங்கேற்றம்
சதிதானோ ஐயமுற்றேன்
மனிதநேயம் துளியுமில்லா
மந்தையெலாம் துடிக்கிறதே
பனிப்புயல்போல் காசுகளைப்
பகட்டுடனே பொழிகிறதே
வனமிருக்கும் வால்களெல்லாம்
வண்டமிழ்மண் வருகிறதே
தனித்தமிழன் கட்சிக்கேன்
தகதிமிதா டெல்லியிலே
கூரைக்குத் தீவைத்த
கூற்றுவரும் யார்தானோ
ஊரையே கலங்கடித்த
ஒறுத்தாரும் எவர்தானோ
யாரைநாம் குறைகூற
யார்மீது பழிபோட
யாரைநாம் ஐயமுற
யார்மீது சினம்கொள்ள
தமிழ்நாட்டின் செல்வங்களே
தங்கங்களே கேளுங்கள்
தமிழ்நூல்கள் படியுங்கள்
தமிழ்மரபு அறியுங்கள்
தமிழ்முன்னோர் வாழ்ந்ததுபோல்
தமிழறத்தை நாடுங்கள்
தமிழ்க்கல்வி ஆற்றலுடன்
தலைவர்களைத் தேர்ந்தெடுங்கள்
வானூர்ந்து வந்திடுவர்
வாகனம்மேல் நின்றிடுவர்
தேனாகப் பேசிடுவர்
தின்பண்டம் தந்திடுவர்
மானாகத் துள்ளுமுங்கள்
மகன்மகளைக் கவர்ந்திடுவர்
வீணாக மயங்காதீர்
விளைபயிரைச் சிதைக்காதீர்
மறத்தமிழர் நாட்டினிலே
மாண்பின்றி வாழாதீர்
அறமில்லா மாந்தர்களை
ஆள்வதற்கு அனுப்பாதீர்
கிறுக்குகள்போல் நடிகர்பின்
கெட்டொழிந்து திரியாதீர்
அறிவுகொண்டு செயல்படுவீர்
ஆற்றாமை தடுத்திடுவீர்

புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed