புவனா கருணாகரன் பற்றி

புவனா கருணாகரன் M.S, CCC/SLP, NJ-L
புவனா கருணாகரன் அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் வாழ்ந்து வருகிறார். அமெரிக்காவிற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு புலம் பெயர்ந்த அமெரிக்கக் குடிமகள். புவனா அவர்கள் தாய்நாடு விட்டு கடல்கள் தாண்டி கண்டங்கள் தாண்டி வாழ்ந்தாலும் தாய்மண்ணையும், தாய்த்தமிழையும் தாய்மண் மக்களையும் உயிரில் சுமந்து திரிபவர்.
நியூஜெர்சி அரசு மருத்துவப் பணியில் இருக்கும் அவர் இரண்டு அழகான பெண் குழந்தைகளுக்குத் தாயார்.
புவனா அவர்கள் தற்போது “அட்லாண்டிக் தென்றல்” என்னும் மரபுக் கவிதைகள் நூலை வெளியிட்டிருக்கிறார். இந்த நூலில் “யாப்பறிக” என்னும் எளிய முறையில் மரபுப்பாடல்கள் இயற்றும் கட்டுரை எழுதியுள்ளார். யாப்பிலக்கண முறைப்படி மரபுக்கவிதைகள் எழுத பிறருக்குக் கற்றுக் கொடுத்துவருகிறார். இவர் கவிதைகளின் தனிச் சிறப்பு சங்க இலக்கியச் சொற்களை எளிமையாக எழிலுடன் தம் கவிதைகளில் கொடுத்து அவற்றை மீண்டும் வழக்கிற்குக் கொண்டுவரும் முயற்சி ஆகும்.
சங்க இலக்கிய அறிஞர் திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அம்மாவிடம் பல ஆண்டுகளாக சங்க இலக்கியம் கற்றுத் தற்போது தானும் பிறருக்குச் சங்க இலக்கியத்தை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
வைதேகி ஹெர்பெர்ட் அம்மாவின் வழிக்காட்டலில் ழகரக்கூடம் என்னும் ஒரு குழுமத்தை சித்தார்த் என்னும் தமிழ் அறிஞருடன் தொடங்கி அதன் மூலம் தமிழ் இலக்கணம், இலக்கியம் அறிஞர்கள் மூலம் கற்றுக்கொடுக்கும் பாடங்களை முன்னெடுத்துவருகிறார்.
இந்த முன்னெடுப்பில் பெரும் அறிஞர் பேராசான் கு. வெ. பாலசுப்பிரமணியன் தற்போது சிலப்பதிகாரம் பாடம் கூறி வருகிறார். இக்குழும் மூலம் யாப்பிலக்கணம், நன்னூல், சமய இலக்கியம், சங்க இலக்கியம் போன்றவை உலகளாவிய தமிழ் மக்களுக்கு இணையவழியில் கற்பிக்கப் பட்டன.
புவனா அவர்கள் தம் தமிழ்ப் பற்றால் தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலை இரண்டாம் ஆண்டில் படிக்கிறார். தமிழ்ப் பெரும் மொழியை நன்கு கற்று, முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதும், தமிழ் இலக்கண இலக்கிய தொன்மையை எங்கும் பரப்புவதும் இவர் இலக்கு.
இவர் பேராசான் முனைவர் கு. வெ பாலசுப்பிரமணியன் அவர்களிடமும், முனைவர் செல்வக்குமாரி ஶ்ரீதாஸ் (கனடா தொல்காப்பிய் மன்றம்) தொல்காப்பியம் பயின்று, நடுநிலை பள்ளியில் படிக்கும் மாணர்கள் அனைவருக்கும் தொல்காப்பியத்தைக் கொண்டு சேர்க்க “தொல்காப்பியத் துளிகள்” என்னும் குட்டி நூலை திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அம்மாவுடன் இணைந்து எழுதியிருக்கிறார். கனடா தொல்காப்பிய மன்ற மாதாந்தர கருத்தரங்கில் ஆராய்ச்சிக் கட்டுரை சொற்பொழிவுகள் நிகழ்த்தியிருக்கிறார்.
இந்த நூலை தமிழ் நாடு அரசு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்கா வந்த பொழுது சிக்காக்கோ நிகழ்ச்சியில் 2000 பிரதிகள் அனைவருக்கும் கொடுத்தது. இப்போது தமிழ் நாடு முழுதும் மாணவர்களுக்கு இந்த நூலை இலவசமாக கொண்டு செல்லும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
புவனா தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள் படைப்பதைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவர் கவிதைகள் சமூக நலன், பெண் சமத்துவம், சமுதாய அநீதி இயற்கை போன்றவையை சுட்டும். அவர் கவிதைகளும், கட்டுரைகளும் சமூக வலைதள இதழ்களிலும், கோகுலம், வல்லினச்சிறகுகள் போன்ற மாத மலர்களிலும், அமெரிக்க தமிழ்ச்சங்க இதழ்களிலும் வெளிவந்துள்ளது.
அமெரிக்க நாட்டின் உயர்ந்த பல்கலைக்கழகமன ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நிதி திரட்ட அரும்பாடு பட்ட தன்னார்வலர்களில் குறிப்பிடத்தக்கவர் புவனா கருணாகரன். ஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை உருவாக்க ஹார்வர்ட் தமிழ் இருக்கை பொதுக் குழுவுடனும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து அயராது உழைத்தவர். அவர் இந்தப் பணிக்கு செய்தச் சேவை அளப்பரியது.
நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் வாழ் நாள் உறுப்பினரான இவர், அமெரிக்கத் தமிழகம் எனும் குழு ஒன்றை அமைத்து அயல் நாட்டு தமிழர்கள் தமிழ் வாசிக்கவும், எழுதவும் பல ஆண்டுகளாக ஊக்குவித்து வருகிறார்.
சமூகப் பணிகள்
புவனா கருணாகரன் தாய்த்தமிழ் மேல் அலாதி பற்றுதலும், மிகுந்த சமூக நலன் அக்கறையும் மிக்கவர். தமிழ் சமூகத்திற்கு என்ன பிரச்சனைகள் நிகர்ந்தாலும் அயராது குரல் கொடுத்து வருபவர். உழவர்க்கு உதவ, கல்வி உரிமைக்கு போராட, மாணவர்க்கு உதவி, பெண்கள்/ குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தட்டிக் கேட்க பல நிகழ்வுகளையும் முயற்சிகளையும் வட அமெரிக்காவில் முன்னெடுத்து நடத்துபவர். ஒக்கி புயலில் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்க்கு, குமரியில் உதவிக் கரங்கள் நீட்டி வரும் இயக்கத்தோடு இணைந்து ஆதரவு கொடுத்து வருகிறார். பத்திரிக்கைகளிலும், இணையதளத்திலும் தமிழ்க் கவிதைகள் கட்டுரைகள் நிறைய எழுதியும் வருகிறார்.
தமிழ் மொழிப் பற்று கொண்ட இவர் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்கு பெரும் உதவி செய்து வருகிறார். நியூஜெர்சி மாநிலத்தில் மொய்விருந்து நிகழ்வில் நிதி திரட்டி தமிழ் நாட்டு விவசாயிகளுக்கு உதவுவது, சுனாமி, சென்னை வெள்ளம், கஜா புயல், ஒக்கி புயல், வரதா புயல், கோவிட் தாக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் போது நிதி திரட்டி தமிழ் மக்களுக்கு உதவுவது, கேட்போர்க்கு மருத்துவ செலவுக்கும், கல்விச் செலவுக்கும் நிதி திரட்டி உதவுவது போன்ற பல சேவைகள் கிளோபல் தமிழ் குழுமம் எனும் குழமம் உண்டு செய்து அதன் மூலம் செய்து வருகிறார்.
பெண்கள் நலத்திலும், சமத்துவத்திலும் மிக்க ஆர்வம் கொண்டவர் இவர் வேறு சமுதாயம் மற்றும் சுற்றுச்சூழல் நலன்களுக்கும் பெரும் பங்கு அளித்து வருகிறார்.
ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் தேர்வு எதிர்த்து போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், விவசாயிகள் போராட்டம் போன்ற மக்கள் நலம் சார்ந்த போராட்டங்களுக்கு உரிய அதிகாரிகளிடம் மனு கொடுப்பது, ஆதரவு அளிப்பது, சமுக வலைதள விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்றவையை முன்னெடுத்துள்ளார்.
நிறைய நிகழ்வுகளில் பேச்சாளராக வரவேற்கப்பட்டு ஆண்பெண் சமத்துவம், மக்கள் அனைவரும் சமத்துவம் போன்ற விழிப்புணர்வு அளித்து வருகிறார்.
வெளிநாட்டு வாழ் தமிழர்களில் தமிழ் மொழிக்கும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்பவர்களில் புவனா கருணாகரன் முக்கியப் பங்களித்து வருகிறார்.
வாழ்நாள் உறுப்பினர்
நியூயார் தமிழ்ச் சங்கம்
கனடாத் தமிழ்க் கவிஞர் கழகம்
தொல்காப்பிய மன்றம் – கனடா
வெளியீடுகள்
அட்லாண்டிக் தென்றல் – மரபுப் பாடல்கள்
தொல்காப்பியத் துளிகள்
தமிழ்க் கல்வி
முதுகலை இரண்டாம் ஆண்டு
தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்
2025 ஆம் ஆண்டு. ஜனவரி 26 ஆம் நாள் கனடா கவிஞர் கழகம் பாவலர் பட்டமளித்துச் சிறப்பித்தது.