தமிழே எங்கும்…(நிலைமண்டிலம்)
காலைக் கதிரின்
ஒளியிலும் தமிழே
மாலை மதியின்
எழிலிலும் தமிழே
சோலை உலவும்
காற்றிலும் தமிழே
பாலை வெளியின்
வெயிலிலும் தமிழே
இலைகள் கிளைகள்
அசைவிலும் தமிழே
மலைகள் முகிலில்கள்
உறவிலும் தமிழே
அலைகள் கரைகள்
இசையிலும் தமிழே
கலைகள் படைக்கும்
விரலிலும் தமிழே
விரியும் முல்லைப்
பூவிலும் தமிழே
பெருந்தேன் தேடும்
வண்டிலும் தமிழே
இருளில் மின்னும்
வானிலும் தமிழே
இரவில் படரும்
குளிரிலும் தமிழே
பாடும் குயிலின்
குரலிலும் தமிழே
ஆடும் அழகிய
மயிலிலும் தமிழே
ஓடும் புள்ளி
மானிலும் தமிழே
ஊடும் மாமழை
துளியிலும் தமிழே
கடற்கரை மணலின்
மேட்டிலும் தமிழே
கடக்கும் ஆற்றின்
வளத்திலும் தமிழே
குடக்கு வானின்
சிவப்பிலும் தமிழே
இடைவெளி இல்லா
அன்பிலும் தமிழே
குருகுகள் மொய்க்கும்
குளத்திலும் தமிழே
கருகரு காக்கை
நிறத்திலும் தமிழே
விரும்பிய ஆசை
முகத்திலும் தமிழே
பிரிவுத் துயரின்
பசப்பிலும் தமிழே
கூடிக் கொஞ்சும்
புள்ளிலும் தமிழே
கோடி விண்மீன்
நடுவிலும் தமிழே
தேடும் காதல்
விழியிலும் தமிழே
நாடித் துடிப்பின்
ஒலியிலும் தமிழே
• புவனா கருணாகரன்
Share this content:
Post Comment