கொள்வதூஉம் கொடுப்பதூஉம் -1
திருவிரட்டை மணிமாலை – காரைக்கால் அம்மையார்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பக்தி இலக்கியத்திற்குப் பெரும் பங்குளது என்பது நாம் அறிந்த ஒன்றே. சங்க காலத்தையும், நீதி நூல் காலத்தையும் அடுத்துப் பக்தி இலக்கியம் தோன்றத் தொடங்கியது. சைவ சமயத்து நாயன்மார்களும், வைணவ சமயத்து ஆழ்வார்களும், ஊர் ஊராகச்சென்று பக்தி பாடல்கள் இயற்றிப்பாடினர். பக்தி இயக்கத்துக்குத் தொடக்கமாக காரைக்கால் அம்மையார் பாடல்கள் அமைந்தன என தமிழ் இலக்கிய வரலாறு கூறுகிறது. அவற்றுள் ஒன்று தான் திருவிரட்டை மணிமாலை.
காரைக்கால் அம்மையார், இயற்றிய திரு இரட்டை மணிமாலை, சைவ சமய இலக்கியத்தில் பதினோராம் திருமுறையில் ஒரு நூலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நூலில் மொத்தம் இருபது பாடல்கள் உள்ளன.
காரைக்கால் அம்மையார் சைவ சமய அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் மட்டுமல்ல முதன்மையானவரும் கூட. இவர் கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவர் என்றும், சிவபெருமானே இவரை “அம்மையே” என அழைத்தார் என்பதும் புராணக்கூற்றுகள்.
இரட்டை மணிமாலை என்பது, தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. (தமிழில் 96 சிற்றிலக்கிய வகைகள் உள்ளன). இரட்டை மணிமாலை வகையில், இரண்டு வெவ்வேறு வகையான பா வடிவங்கள் ( ஒரு முத்து, ஒரு பவளம் என இரு மணிகள் வரும் சாரம்) மாறி மாறி வரும். காரைக்கால் அம்மையாரின் திருவிரட்டை மணிமாலையில் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பு வடிவமும், நேரிசை வெண்பாவும் மாறி மாறி வரும்.
மேலும் இப்பாடல்களில் அந்தாதி வகை தொடையையும் நாம் காணலாம். அந்தாதி என்றால் ஒரு பாடலின் ஈற்றுச் சொல்லை, அடுத்த பாடலின் முதற்சொல்லாகப் பயன்படுத்தி எழுதுவது.
இந்த நூலில் காரைக்கால் அம்மையார், சிவபெருமானை வழிபடும்படி தன் நெஞ்சுக்குச் சொல்வதும், அவரைப் போற்றுவதும், பிறரையும் அவரை வணங்கக் கூறுவதும் நாம் காணலாம்.
இந்த நூலில் உள்ள இருபது பாடல்களிலும், இயற்கையோ, இனிமையோ இல்லையென்றாலும், சிவன் மீது அம்மை கொண்ட அளவிலாப் பற்று நமக்கு நன்கு விளங்குகிறது. இப்பாடல்களில் அரவம்/பாம்பு, சுடுகாடு, பேய்க்கூட்டம், பூதம், அசுரர், சடைமுடி, வார் சடை, திருநீறு பூசியவன், செந்தீயில் ஆடுபவன், தலையோடு அணிந்தவன், போன்ற சொல்லாடல்கள் வருவதால் என்னமோ, இனிமை குன்றியிருப்பது போல் எனக்குத் தோன்றிற்று.
ஆனாலும் ஒரு பாடலில் அம்மையார் சிவபெருமானிடம் அவர் தம் தலையில் கங்கையென்னும் பெண்ணை வைத்திருப்பதை, உமை அம்மை கண்டால் என்ன செய்வார் என வினவுவதும், இன்னொரு பாடலில் அவரிடம் “நீ உன் உடலின் மேல் படம் விரித்தாடும் பாம்பை வைத்திருப்பதால் உன்னை அன்பினால் நாங்கள் எப்படி அடைவது?” என்று கேட்பதுவும் மிக அழகாகவும் சுவைக்கும்படியும் இருக்கின்றன.
இன்னொரு பாடலில் “உனக்கொன்று கூறப்பட இருக்கிறது” என்று கூறி, சிவபெருமானுக்கே அறிவுரை வணங்குவார், என்னவென்றால் அவர் தலை மேலிருக்கும் சீறும் பாம்பினைத் அவர் தொடக்கூடாது என்று.
இந்தப் பாடல்களில் வரும் சில அழகிய சொல்லாடல்கள்:
வெள்ளை இளம் திங்களும் எருக்கும் இருக்கும் சென்னி ஈசன் – தலையில் வெள்ளை வளரும், நிலவும் எருக்கம் பூவும் அணிந்த ஈசன்.
இனவண்டு கிண்டிப் பொரா நின்ற கொன்றைப் பொதும்பர்க் கிடந்து – வண்டுகளின் தொகுதி (கூட்டம்) கிளறிப் போரிடும் கொன்றை மலர்களையுடைய சோலையிலிருந்து.
திரைக்கின்ற கங்கையும், தேன்நின்ற கொன்றையும் – அலைகளையுடைய கங்கை ஆறும், தேன் நிறைந்த கொன்றை மலர்களையும்.
எண் தோளன், பைம்பொற் கழலை – எட்டுத் தோள்கள் கொண்ட பசிய பொற்கழலணிந்தோன்.
மேலும்,
சிவபெருமானைக்
கழல் கொண்ட சேவடியான்
கூற்று உருவம் காய்ந்தான்
சடைமுடி நம்பன்
நொந்தாத செந்தீ அனையான்
மொய் கழல் புண்ணியன்
அவிர் சடையார் (ஒளியுடைய சடை) என்றெல்லாம் போற்றிப்பாடியிருப்பது சிறப்பு.
நீங்களும் இந்த நூலை வாசித்து மகிழுங்கள்.
• புவனா கருணாகரன்
Share this content:
Post Comment