Loading Now

கவிதை யாதெனில்….

கவிதை
தித்திக்கும் கரும்பு, கற்கண்டு,
கனி

கவிதை
வாழ்க்கை உணவின்
உப்பு
கண்ணீர் நிலையின்
வெளிப்பாடு

கவிதை
தீ தென்னை தென்றல்
பா பனை பசுமை
பூ பொழில் பொய்கை
மா பலா வாழை
மா புள் புல்
கயல் வயல் வரப்பு
ஆறு அருவி ஆழி
மலை அலை கிளை
மண்மணம் மழைச்சாரல் பனித்துளி
இறை இயற்கை இனிமை

கவிதை
பூப்பூவாகப் பறக்கும்
வண்டுக்குத் தேன்
சொல் தேடி அலையும்
கவிஞனுக்கு மூச்சு

கவிதை
வெயிலில் தவிப்போர்க்கு
தண் நீர்
பரல்கள்மேல் நடப்போர்க்கு
மென் சேக்கை

கவிதை
ஆழ்கடல் கடக்கும் கலத்துக்குக்
கலங்கரை விளக்கு
புயல்வேளை தத்தளிக்கும் படகுக்குத்
துடுப்பு

கவிதை
நிலத்திற்கு மழைதரும், வளம்தரும்
கார்முகில்
இறக்கைகள் விரிக்கும் புள்ளிற்குக்
காற்று

கவிதை
துயரெனும் ஆற்றைக் கடக்க வைக்கும்
பாலம்
மனதைக் காக்கும் ஊரெல்லைவாழ்
கருப்பசாமி

கவிதை
மேற்கில் விரியும் சிவப்பு
காற்றில் உலவும் தண்மை

கவிதை
சோலைவனத்தின் ஈரம்
பாலைவனத்தின் தூறல்

கவிதை
காலைக் கதிரின் ஒளிமுகை
மாலை நோயின் மூலிகை

கவிதை
மல்லிகைத் தோட்டத்து
நறுமணம்
வைகறை வானத்து
மீன் கூட்டம்

கவிதை
கூவும் குயில் தரும்
ஏக்கம்
மோதும் அலை தரும்
நினைவு

கவிதை
நத்தைக்கு ஓடு
நிலத்திற்குக் காடு

கவிதை
உழவனுக்குக் காளை
கிழவனுக்குக் கைத்தடி

கவிதை
வறுமை போக்கும் செல்வம்
பசியை ஓட்டும் அமிழ்தம்
புயலில் காக்கும் கூரை
குளிரைக் களையும் போர்வை

கவிதை
கூதிர் காலத்துத் தேநீர்
கோடை காலத்து மழை
இலையுதிர் காலத்து இனிமை
இளவேனில் காலத்துப் புள்ளொலி

கவிதை
வானவில்லின் எழிலுரு
வானம்பாடியின் இன்னிசை

கவிதை
எழுத்திலாலான் தாஜ்மஹால்
சீர்களாலான எகிப்த்துக் கோபுரம்
அசைகள் கொட்டும் நையகரா
அடிகள் கொண்ட அரணான சீனச் சுவர்
அணிகளாலானத் தொங்கும் பூங்கா
முதன்மையான உலக வியப்பு

கவிதை
தொலையும் போது திசை
அலையும் போது ஓய்வு
அழுகை போது தூளி
பழகும் போது புன்னகை
சோர்வின் போது ஊக்கச்சத்து

கவிதை
அகத்தின் உரிப்பொருள்
ஊடல், பிரிதல்
தேடல், கூடல்
இருத்தல், இரங்கல்

கவிதை
காதல் போரின் ஆயுதம்
மோதல் போரின் முத்தம்

கவிதை
உறங்கும் போது கனவு
விழித்த பிறகு உணர்வு

கவிதை
மழலையின் சிரிப்பு
காதலின் முதற்பார்வை

கவிதை
கானகத்தின் ஒற்றையடிப் பாதை
முன்னோர் விட்டுச்சென்ற சுவடு

கவிதை
தந்தையின் வெள்ளை வேட்டி
தாயின் சிவப்புப்பூஞ் சேலை

கவிதை
தந்தையின் முறுக்கு மீசை
அவர்
குரல் கூறிய “அம்மாடி”

கவிதை
தமிழ்மொழியின் சிறப்பு
என் தாய்மடியின் காப்பு

-புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed