தமிழே…..தாய்
சாதி, மதம் போலவே மொழி அரசியலும், பிரிவினைகளும் காலங்காலமாக நடந்து வருகிறது. தொல்காப்பியத்துள் இடைச்செருகல்களே இதற்குச் சான்று.
அப்படித்தான் இப்போது நடிகர் கமலஹாசன் கூறிய ஒரு கூற்றை அரசியலாக்கிப் பிரிவினையைத் தூண்டும் நோக்கமும் நடந்து வருகிறதென்றால் அது பிழையாகாது.
ஒரு மொழி மீது பற்றுக் கொண்டு அதன் சிறப்பையும், தொன்மையையும் புகழ்வதென்பது வேறு. அதே மொழியை ஆழக்கற்று, ஆராய்ச்சி நோக்கில் பார்த்து, எந்தத் தனிமனித விருப்பும் வெறுப்பும் இல்லாமல் உண்மைகளை உரக்கக் கூறுவதென்பது வேறு.
மொழி குறித்தான வரலாற்று உண்மைகளை கூறும்பொழுது, ஆராய்ச்சி சான்றுகள் கொண்டு கூறுவது மிகவும் இன்றியமையாதது. அப்படிக் கூறும் போது ஒருவர் தனக்குச் சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கூறாமல், அக்கருத்துக்கான மாற்றுக் கருத்துக்களையும் உற்று நோக்கி உண்மைத் தன்மையை ஆராய்ந்து கூற வேண்டும்.
அரசியல் நோக்கிலோ, வணிக நோக்கிலா, தற்புகழ்ச்சிக்காகவோ, தன்னலத்துக்காகவோ, மத விருப்போடோ, சாதிப் பேதமையுடனோ மொழியைப் பற்றிய தொன்மையையும், சிறப்பையும் சிதைப்பது அறமாகாது. மொழி மீது காதல் கொண்டு அதை ஆழக்கற்று, திறனாய்வில் ஈடுபட்டு, பிறருக்கும் கற்பிக்கும் அறிஞர்கள் இப்படிச்செய்ய துணிவதில்லை. அப்படியான அறிஞர்கள் நம் நாட்டிலேயே பலர் உளர்.
இப்போது தமிழ் மொழியிலிருந்து, கன்னடமொழி பிறந்ததா என்னும் கூற்றுக்கு வருவோம்.
மொழி வரலாற்று நூல்களும், மொழியியல் நூல்களும் இப்படித்தான் கூறுகின்றன. கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகள் தமிழ் மொழிக்குப் பின்னால் தோன்றியவை. அவை எப்படித் தோன்றின என்றால் தமிழின் கிளை மொழிகளாக. தாயிடமிருந்து பிள்ளைகள் பிரிந்துச் சென்று தனியாக வாழ்வது போல.
அந்தப் பிரிவுக்குக் காரணங்கள் பல.
தொன்று தொட்டே மக்கள் உணவும், தொழிலும், அடிப்படைத் தேவைகளும் தேடி இடம்பெயர்ந்து வருகிறார்கள். அப்படி இடம் பெயரும் போது அவரவர் மொழியை எடுத்து வருகிறார்கள். அந்த மொழியை இடம் பெயர்ந்த நிலத்திலுள்ளவர்களுடன் பகிர்கிறார்கள். மொழிகள் இவ்வாறாகக் கலக்கின்றன. மொழிகளுக்குள் கொடுக்கல் வாங்கல் காலங்காலமாக நிகழ்ந்து வருகின்றது. அப்படி நிகழும் போது புது மொழிகள் தோன்றுவதில் என்ன வியப்பு!
இந்தப் புது மொழிகள் அந்தத் தாய் நிலத்திலுள்ள மொழியின் தன்மைகளோடு, பிற நிலத்திலிருந்து கொண்டு வந்த மொழியின் தன்மைகளுடன் கலந்ததாக அமையும். வடமொழி ஆளுமை மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளுக்குள் இவ்வாறே நிகழ்ந்தது. மேலும் தமிழ் நாட்டில் மணிப்பிரவாளம் தோன்றியதும் இவ்வாறே.
ஆரியர் வருகைக்கு முன் தற்போதைய இந்திய நாடு முழுவதும் திராவிட மொழி பரவியிருந்தது என எஸ். கே சட்டர்ஜி குறிப்பிடுகிறார். திராவிட மொழி எனபட்டது தமிழின மொழியேயாம்.
(திராவிட- திரவிடம்- திரமிடம்- திரமிளம், த்ரமிளோ – தமிளோ – தமிழ் ) இது ஒருபுறம் இருக்கட்டும்.
தமிழ் மொழியின் கிளை மொழிகளாகத்தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் தோன்றின என்பதற்கான சான்றை Kamil Zvelebil எழுதிய The smile of Murugan என்னும் நூலில் நாம் காணலாம். இவர் தமிழிலிருந்து இந்த மொழிகள் எந்தக் காலத்தில் பிரிந்தன என்பதை விளக்குகிறார்.
மேலும் மொழி வரலாற்று நூல்கள் என்ன கூறுகின்றன?
வேங்கடமலைக்கு வடக்கே கிருஷ்ணா, கோதாவரி ஆற்றங்கரையில் பழங்காலத்தில் தமிழ் மொழி வேறுமாதிரியாகப் பேசப்பட்டது. அந்தத் தமிழை, தமிழ் மொழியின் திரிபுகள் என உணராமல் தமிழர் எள்ளினர். இம்மொழி வடுகர் மொழி என எள்ளியுரைக்கப்பெற்றதாம். இதன்கண் நாளுக்கு நாள் திரிபுகள் மிகுந்து தமிழை விட்டு விலகிய நிலை அங்கு நிலவியதாம். தமிழர்களின் புறக்கணிப்பால் உருமாறிய இம்மொழியை நன்னயப்பட்டர் முதலான வடமொழி அறிஞர் பற்றி, வடமொழியை யொட்டி எழுத்துமுறை அமைத்தனராம். பின் அம்மொழியில் இலக்கிய இலக்கணம் இயற்றி, இதைத் தனிமொழியாக வளர்த்துத் தெலுங்கு என்று பெயரிட்டனராம்.
தமிழகத்தின் மேற்கே மைசூர் பகுதியில் பேசப்பட்டு வந்த திரிபுகள் கொண்ட தமிழ் மொழி, தமிழரின் புறக்கணிப்பால் மேலும் திரிந்து உருமாறியது. கேசவர் முதலிய வடமொழி அறிஞர் எழுத்து முறையும் இலக்கியமும் இலக்கணமும் தந்தமையால் கன்னடம் என்று பெயர் பெற்றுத் தனி மொழியாயிற்று, கன்னட மொழி என்கிறது மொழி வரலாறு.
தமிழகத்தின் ஒரு பகுதியாகிய சேர நாட்டில் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரும் தமிழ் மொழி இருந்து வந்தது. சோழ, பாண்டியர் மரபுகள் மறைந்ததால் சேர வேந்தர்கள் மரபுடனான உறவு அறுபட்டது. இதனால் சேர நாட்டிற்குத் தமிழகத் தொடர்பும் தமிழ் மொழித் தொடர்பும் நீங்கி, ஒரு வகை குழப்ப நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் எழுத்தச்சன் முதலிய வடமொழி அறிஞர் இங்குப் பேசப்பட்ட திரிந்த தமிழுக்கு எழுத்து வடிவம் கொடுத்து நூல்கள் இயற்றினர். வடமொழியை ஒட்டித் திரிந்த தமிழுக்கு இலக்கணம் வகுக்கப் பெற்றது. இவ்வாறே மலையாளம் என்ற மொழி பிறந்தது.
இந்த மூன்று மொழிகளிலும் வேர்ச்சொல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியாளர்கள், இந்த மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவை நிரூவியிருக்கின்றனர்.
ஆகவே உலக நாயகன் கமலஹாசனை மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கூறுவதைவிட, நீதி வழுவாமல் இருக்கவேண்டுமென்றால் மொழி ஆராய்ச்சியாளர்களை அழைத்து மொழி வரலாற்று உண்மைகளை அறிந்து செயல்படுவதே மனித அறம்.
ஆம் தமிழே தாய். மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகள் தமிழில் கிளைத்த மொழிகள்.
தமிழுக்கும் இம்மொழிகளுக்கும் தொப்புள் கொடி உறவு என்பதே உண்மை.




இது வெறும் உணர்வல்ல… வரலாற்று உண்மை.
• புவனா கருணாகரன்
Share this content:
Post Comment