Loading Now

மருத உரிப்பொருள்(தரவு கொச்சகக் கலிப்பா)

பாலையாழ் பண்ணென்றா
பாற்கடலின் நிறமென்றா
மாலைவரும் மழையென்றா
மஞ்சமல்லி மணமென்றா
காலைவிழும் பனியென்றா
கண்தவழும் கனவென்றா
சோலைசூழ் வனப்பென்றா
சுடர்த்தொடிநான் கதிரென்றா
மயங்கவைக்கும் மேற்கென்றா
மலையுறங்கும் முகிலென்றா
துயில்கலைக்கும் குரலென்றா
தூளிப்பாட்டு இதமென்றா
உயர்கிளையின் கனியென்றா
உச்சிவரைத் தேனென்றா
இயற்றமிழின் வளமென்றா
இளங்காலைக் குளிரென்றா
விண்மீனின் துகளென்றா
வீணைபோலே அழகென்றா
தண்ணிலவின் முகமென்றா
தாக்கும்கண் குவளையென்றா
மண்மழைபோல் காதலென்றா
மாறாத உறவென்றா
அன்னைமடி சுகமென்றா
ஆழியதன் கரையென்றா
தென்மதுரை வையையென்றா
தென்றலுரு இதமென்றா
பொன்போன்ற ஒளியென்றா
பூப்போன்ற முகமென்றா
எண்ணில்லா அம்தீம்சொல்
எடுத்தோதி மடலேறி
இன்றேனோ பரத்தைமையில்
இல்மறந்து தொலைந்தனையே!
  • புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed