கொஞ்சூண்டு தமிழ்ச்சோறு நாளும் உண்போமா வாரும் தொல்காப்பியத் துளிகள் – 2
சங்க இலக்கியம் படிப்பவர்கள் அறிய வேண்டியது, அகப்பாடல்களில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருள்கள் ஒன்றினும் ஒன்று சிறந்ததாகப் பயின்று வரும் என்னும் கருத்து.
“முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறைசிறந் தனவே
பாடல்கள் பயின்றவை நாடுங் காலை”
(அகத்திணையியல், பொருளதிகாரம், தொல்காப்பியம் 3)
முதற்பொருள் என்றால் என்ன?
“முதலெனப் படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிய இயல்பு உணர்ந் தோரே”
(அகத்திணையியல், பொருளதிகாரம், தொல்காப்பியம் 4)
முதற்பொருள் என்பது பொழுதும் காலமும் ஆகும்.
பொழுதுகள் இரண்டு
அவை:
- சிறுபொழுது: வைகறை, மாலை, எற்பாடு போன்றவை
- பெரும்பொழுது: கூதிர்காலம், கார்காலம் போன்றவை
ஒவ்வொரு திணைக்கும் சிறுபொழுது, பெரும்பொழுது உள
எடுத்துக்காட்டு: முல்லையின் சிறுபொழுது மாலை, பெரும்பொழுது கார்காலம்
நிலம்:
குறிஞ்சி – மைவரை உலகம் – மலையும், மலையும் மலை சார்ந்த
முல்லை – காடுரை உலகம் – காடும் காடு சார்ந்த
மருதம் – தீம்புனல் உலகம் – வயலும், வயல் சார்ந்த
நெய்தல் – பெருமணல் உலகம் – கடலும், கடல் சார்ந்த நிலம்
இந்த நான்கு நிலங்களும் தான் தமிழ்நாட்டு நிலங்கள் எனவும், பாலை என்பது குறிஞ்சியும், முல்லையும் திரிந்த நிலையில் உள்ள வறண்ட நிலமென்றும் புரிவோம். (சஹாரா பாலவனம் போன்ற, மணலால் ஆன, ஒட்டகம் போகும் நிலமல்ல)
“முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்கு துயர்உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”
– (சிலப்பதிகாரம்)
இப்போது ஒவ்வொரு திணைக்குமான முதற்பொருள் பார்ப்போமா?
முல்லை:
நிலம்: காடும், காடு சார்ந்த நிலம்
சிறுபொழுது: மாலை
பெரும்பொழுது: கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
குறிஞ்சி:
நிலம்: மலையும் மலை சார்ந்த நிலமும்
சிறுபொழுது: யாமம்
பெரும்பொழுது: கூதிர்காலம், முன்பனிக்காலம் (ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை)
மருதம்:
நிலம்: வயலும் வயல் சார்ந்த நிலமும்
சிறுபொழுது: வைகறை, விடியல்
பெரும்பொழுது கூறப்படவில்லை
எனவே எல்லாப் பெரும்பொழுதும் இதற்கு உரியன
நெய்தல்:
நிலம்: கடலும் கடல் சார்ந்த நிலமும்
சிறுபொழுது: அந்திமாலை / எற்பாடு
பெரும்பொழுது கூறப்படவில்லை
எனவே எல்லாப் பெரும்பொழுதும் இதற்கு உரியன
பாலை:
சிறுபொழுது: நண்பகல்
பெரும்பொழுது: இளவேனில், முதுவேனில், பின்பனிக்காலம் ( சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, மாசி, பங்குனி)
மேல்கூறியவையின் தொல்காப்பிய நூற்பாக்கள்:
காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர் (6)
பனி எதிர் பருவமும் உரித்தென மொழிப (7)
வைகறை விடியல் மருதம் எற்பாடு
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும் (8)
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே (9)
பின்பனி தானும் உரித்தென மொழிப (10)
அகத்திணையியல், பொருளதிகாரம் 6, 7, 8, 9, 10

- புவனா கருணாகரன்
தொல்காப்பிய நூலிலிருந்து
Share this content:
Post Comment