Loading Now

சில காதல்

மையில்லாக் கண்ணாக
மணமில்லா மலராக
உலவிடுதே
சில காதல்

கதிரில்லா வானாக
நிலவில்லா இரவாக
இருண்டிடுதே
சில காதல்

சொல்லில்லா இசையாக
குரலில்லாக் குயிலாக
கதறிடுதே
சில காதல்

பண்ணில்லாத் திணையாக
பாணன் தொடாப் பறையாக
உறங்கிடுதே
சில காதல்

ஒலியில்லா யாழாக
ஒளியில்லா வெளியாக
விசும்பிடுதே
சில காதல்

ஊற்றில்லா மலையாக
காற்றில்லா நிலமாக
காய்ந்திடுதே
சில காதல்

அலை உறைந்த கடலாக
இலை உலர்ந்த மரமாக
நலிந்திடுதே
சில காதல்

வண்டில்லா வனமாக
வனப்பில்லாக் கலையாக
வாடிடுதே
சில காதல்

தொலைந்தெங்கும் போகாது
கண்டெடுக்க இயலாது
வாழ்ந்திடுதே
சில காதல்

யாப்பில்லாக் கவியாக
யாதுமில்லாக் கூடாக
சிதைந்திடுதே
சில காதல்

ஆரியத்தின் வரவாக
வடமொழியின் திணிப்பாக
பேச்சில்லா மொழியாக
உயிரில்லா வெறுங்கூடாக
விளங்கிடுதே
சில காதல்

நேர்மையில்லாக் கூற்றாக
போர்வையில்லாக் குளிராக
நடுங்கிடுதே
சில காதல்

அறமில்லாச் செயலாக
அன்பில்லா நடிப்பாக
அலைந்திடுதே
சில காதல்

முகநூலில் பேச்சாக
முறையில்லா உறவாக
அழுகிடுதே
சில காதல்

பொன்கேட்டும் பொருள்கேட்டும்
பெண்வதைத்தும் துயர்கொடுத்தும்
வன்கொடுமை பலசெய்தும்
தேய்ந்திடுதே
சில காதல்

தோலின் நிறமாக
வழிபடும் கடவுளாக
உண்ணும் உணவாக
உடலின் அழகாக
மதத்தாலும் இனத்தாலும்
நிறத்தாலும் மொழியாலும்
ஒழிகிறதே
சில காதல்

வயல் புகுந்த களிறாக
உயிர் அறுக்கும் வாளாக
இழிந்திடுதே
சில காதல்

அதிகாரச் செயலாக
ஆணவத்தின் கருவாக
மானமென்றப் பொருளாக
மனிதமில்லாச் சாதியாக
மதிகெட்ட வெறியாக
மாய்ந்திடுதே
சில காதல்

  • புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed