அன்றும் இன்றும்(தரவு கொச்சகக் கலிப்பா)
வெள்ளாம்பல் மலர்ந்திருக்கும்
வெண்பரிதி புலர்ந்திருக்கும்
உள்ளத்திலே மகிழ்விருக்கும்
உவகைபொங்கி உயிரிருக்கும்
கள்ளமிலா அன்பிருக்கும்
கவிதையென்றன் விரலிருக்கும்
கொள்ளைகொண்ட நீயிருப்பாய்
குறையின்றி நாள்நகரும்
கிளையிருந்து குயிலிசைக்கும்
கீழ்வானம் எழிலுடுத்தும்
மலையிருந்து முகில்தூவும்
மலைக்காற்றுக் கண்தீண்டும்
அலைநிறைந்த கான்யாறு
அன்புசொல்லப் பாய்ந்துவரும்
நிலையாக நீயிருப்பாய்
நிறைவாக நாள்நகரும்
பிடியணைத்துக் களிறுவரும்
பிறைநிலவு ஒளியிறக்கும்
விடிகாலை வானிருந்து
விண்மீன்கள் கண்ணடிக்கும்
கடுவனொடு மந்திஊட
காதல்விழா அரங்கேறும்
கொடுவரிபோல் நீயிருப்பாய்
கொஞ்சலிலே நாள்நகரும்
அன்றெல்லாம் வெயில்குளிரும்
அருவியாட மனமோடும்
உன்கழலும் என்சிலம்பும்
ஓடைக்கரை உலவிவரும்
தண்மாலை வேளைகளில்
தமிழ்ப்பாட்டு ஒலியினிக்கும்
தென்றல்போல் நீயிருப்பாய்
தித்தித்து நாள்நகரும்
முன்புபோல இன்றில்லை
முத்தமிழ்மண் செழிப்பில்லை
அன்றிருந்த பசுமையில்லை
ஆறுமில்லை அழகுமில்லை
பண்பாடும் பறவையில்லை
பல்லுயிர்வாழ் காடுமில்லை
அன்னைபோன்ற நீயுமில்லை
அழுகையில்தான் நாள்நகரும்
மானுமில்லை மயிலுமில்லை
மஞ்சுபடர் மலையுமில்லை
தேனுண்ணும் வண்டில்லை
தினைபுனத்தில் கிளிகளில்லை
வானகத்தில் வெள்ளிஉவா
வட்டமிட்டும் குளிர்ச்சியில்லை
கானகத்தில் நீயில்லை
கண்கலுழ்வ நாள்நகரும்
ஆடிமழை பெய்வதில்லை
அருவிநீரும் இனிப்பதில்லை
ஓடியோடி உழைத்திருந்தும்
உணவுண்ண நேரமில்லை
பாடியாடி மகிழ்ந்திருக்க
பக்கத்தில் நீயுமில்லை
தேடலிலென் நாள்நகரும்
தீந்தமிழ்தான் கூடவரும்
- புவனா கருணாகரன்
Share this content:
Post Comment