முரசொலிப்பீர்(எண்சீர் விருத்தம்)
மண்ணெல்லாம் மாசாக்கி மணல்மொத்தம் அள்ளி
மலைகளெல்லாம் குடைந்துடைத்துக் கனிமவளம் விற்றுக்
கண்போன்ற வயலெல்லாம் காய்ந்திடவே செய்து
காவேரிக் கரையெங்கும் குழிகுழியாய்த் தோண்டித்
தண்ணிலத்தைப் பாலையெனச் செய்துவிட்ட பின்னும்
தண்ணீரைத் தனியார்க்குக் கொடுத்துவிட்டு ஆள்வர்
புண்நெஞ்சம் கொண்டெங்கும் மதுக்கடைகள் வைத்துப்
பொலிவான குடும்பங்களை அழித்துப்பணம் பார்ப்பர்
நீட்டென்னும் தேர்வுகளைப் புகுத்திவிட்டுப் பிஞ்சு
நெஞ்சங்களின் கனவுகளை அடியோடு சாய்ப்பர்
கூட்டத்தில் தமிழென்றும் தமிழரென்றும் கூவும்
கொடுங்கள்வர்ப் பிள்ளைகளோ அயல்மொழியே கற்பர்
ஏட்டெடுத்துப் படிக்குமுன்னைத் தொண்டனாக மாற்ற
இழிந்தஅந்த சாதிமத இனவெறியைப் பெய்வர்
நாட்டையாளும் எல்லாமும் பேராசைக் கூட்டம்
நலிந்தோரே இதைப்புரிந்து வாழ்ந்திடுதல் வேண்டும்
ஆளுகின்ற கட்சிமட்டும் அழுக்கான தல்ல
அரசியலில் உழலுகின்ற அனைத்தையுமே காணீர்
தேளைப்போல் கொடியபல சாதிவெறிக் கட்சி
திகட்டாமல் வாய்விற்கும் மொழிவெறியின் கட்சி
ஆளைக்கொல்லும் மதவெறியை மூலதன மாக்கி
அண்டத்தை அடக்குகின்ற ஆன்மீகக் கட்சி
ஊளையிடும் திராவிடமும் தனித்தமிழும் வேடம்
ஒண்டமிழோர்! அரசியலார் செல்வத்தைப் பாரீர்
தூய்மையில்லா நீர்நிலைகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட்
துளிர்க்காத செடிகொடிகள், பெருந்துறையில் சிப்காட்
காய்ந்துவிட்ட வயல்வெளிகள், கனிகளில்லாக் காடு
களிறலையும் நிலமொழித்துச் சிவனுக்குக் கோடு
வாய்மையில்லாத் தலைமையினால் வாழ்க்கைபெரும் பாடு
வறண்டுபோன ஐந்திணையில் வீண்பேச்சே கேடு
மாய்ந்ததிங்கே மனிதகுணம் சாய்ந்ததிங்கே நாடு
மலைக்கடவுள் முருகனையும் களவுதந்தோம் தேடு
சாதியொன்றே மானமென்று சாக்கடைகள் மூச்சு
சாத்திரங்கள் சொல்வோரால் சட்டம்வீண் ஆச்சு
காதலித்தால் கருணையின்றிக் கழுத்தறுக்கும் மாண்பு
கற்றிட்ட கல்வியினால் யாதுபயன் ஈங்கு
ஆதியிலே தமிழினத்தில் சாதியில்லை இல்லை
அண்டவந்த வர்க்கத்தால் நுழைந்ததிந்தத் தொல்லை
ஓதுகிறேன் பறைகொட்டித் தமிழ்மக்காள் கேளும்
உயர்மனிதம் பேணாமல் அழிவதுஏன் கூறும்
நடிகர்பின் போவதினால் பயனுண்டா பிள்ளாய்
நாட்டுநிலை கவனிக்கத் தவறுவதேன் பிள்ளாய்
அடிதடியில் இறங்குவதால் விளைவென்ன பிள்ளாய்
அடியாளாய் வாழ்வதிலே ஆண்மையேது பிள்ளாய்
குடிசைகளைக் கொளுத்துதற்கு வீதியில்நீ பிள்ளாய்
கொடுந்தலைவன் வாரீசோ மாளிகையுள் பிள்ளாய்
குடிவிற்கும் மாநிலத்தில் குடியிருக்கும் பிள்ளாய்
கூரறிவால் தடையுடைத்தே உயர்ந்திடுநீ பிள்ளாய்
சுதந்திரநாள் கொண்டாடும் மாமக்கள் வாரும்
சுற்றுச்சூழல் என்னநிலை எண்ணினீரா கூறும்
மதிகெட்டு உரிமையின்றி அச்சத்துடன் நாளும்
மந்தையாடு போல்திரியும் வாழ்க்கையென்ன சொல்லும்
புதுப்புதிதாய்த் திருட்டுவேலை தேர்தலிலே செய்தே
பொன்போன்ற வளங்களெல்லாம் அழித்துவிட்டார் பாரும்
மதவெறியைத் தூண்டிவிடும் அரசியலைக் காண்க
மாறுவேட நரிகளுக்கு அடிமையானோம் மீள்க
தனியார்கள் பணம்பெற்று ஆளுகின்றோர் வீழ்க
தம்மக்கள் பேணாத ஓனாய்கள் வீழ்க
வணிகமொன்றே குறிவைக்கும் அதிகாரம் வீழ்க
பணியாளர் மிதித்தொடுக்கும் பாம்பினங்கள் வீழ்க
புனிதமான காக்கியுடைப் புகழ்குறைப்போர் வீழ்க
புல்லுருவி போல்வாழும் அரசியலார் வீழ்க
மனிதமில்லாத் தொழிலதிபர் உடைந்தின்றே வீழ்க
மறத்தமிழர் நலம்குலைக்கும் அரசாங்கம் வீழ்க
அடிமைபோல் வாழ்ந்திருக்கும் தமிழினமே எழுக
அரசாளும் கொடியவரை அழித்தொடுக்க எழுக
அடர்வளத்தைச் சுரண்டுவோரின் கையுடைக்க எழுக
அறம்தொலைத்து ஆள்வோரைப் புறந்தள்ள எழுக
படர்மலைகள் காக்கஇன்றே கூட்டமாக எழுக
பக்தியென்றே பிதற்றாமல் பகுத்தறிவால் எழுக
சுடர்கதிராய் மக்களாட்சி மலர்ந்திடவே எழுக
துன்பந்தரும் ஊழலாட்சி களைந்திடவே எழுக
அன்பர்களே நண்பர்களே சாதிமதப் பேதம்
அழித்தொழிக்க இணைந்திடுவோம் விரைவாக எழுக
அன்பர்களே நண்பர்களே அதிகார வர்க்க
ஆணவத்தை ஒடுக்கிடுவோம் அறம்பேண எழுக
அன்பர்களே நண்பர்களே ஒன்றாவோம் எழுக
அருந்தமிழர்க் காத்திடுவோம் பறைகொட்டி எழுக
அன்பர்களே நண்பர்களே வென்றாவோம் எழுக
அருந்தமிழ்மண் மீட்டெடுப்போம் முரசொலித்து எழுக
- புவனா கருணாகரன்
Share this content:
Post Comment