Loading Now

மருதம் பாடினேன்(தரவு கொச்சகக் கலிப்பா)

வியர்வைசிந்தும் உழவர்களும்
வெண்ணெல்லும் செந்நெல்லும்
துயர்களையும் கஞ்சிசோறும்
சுட்டெரிக்கும் பகலவனும்
பயிரறுக்கும் வேளையிலே
பாணர்களின் யாழிசையும்
வயற்காட்டில் விடலைகளும்
வஞ்சியரின் உரைவீச்சும்
வண்டொலியும் வைகறையும்
வளைந்தாடும் கரும்புகளும்
கண்டிமேயும் கழனிகளும்
கழுநீர்ப்பூ வரப்புகளும்
கெண்டைவாழும் நீர்வளமும்
கீழ்வான முகில்செழிப்பும்
அன்னங்களும் குருகுகளும்
அயராத நாரைகளும்
புவிமணக்கும் நிலமலரும்
பூத்துநிற்கும் மரமலரும்
கவின்மிகுந்த கொடிமலரும்
கண்போன்ற குவளைகளும்
குவிந்திருக்கும் கருப்புளுந்தும்
குளமெங்கும் தாமரையும்
தவித்திருக்கும் தலைமகளும்
தலைவனவன் பரத்தமையும்
புனலாடும் பொழுதுகளும்
புலவிநீளும் நிகழ்வுகளும்
இனிப்பான காதலினால்
இல்லறத்தில் ஊடல்களும்
கனித்தமிழ்மண் மரபுகளும்
கடாவிடுதல் விளையாட்டும்
இனிதான காட்சிகளாம்
ஏர்கலப்பை மருதத்திலே!
  • புவனா கருணாகரன்

Share this content:

Post Comment

You May Have Missed